இலங்கை தமிழ் அரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியவற்றின் உயர்மட்ட கூட்டங்களே விரைவில் நடக்கவுள்ளன.
நவம்பர் 5ஆம் திகதி தமிழ் தேசிய அரசியல் பரப்பிலுள்ள இரண்டு பிரதான கட்சிகளின் உயர்மட்ட கூட்டங்கள் இடம்பெறுகின்றன. கட்சிகளின் மத்தியகுழு கூட்டங்கள் அடிக்கடி நடப்பது வழக்கம் என்றாலும், இம்முறை இரண்டு கட்சிகளின் கூட்டங்களும் பெரும் சர்ச்சைகளின் மத்தியில் நடைபெறவுள்ளது. இலங்கை தமிழ் அரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியவற்றின் உயர்மட்ட கூட்டங்களே விரைவில் நடக்கவுள்ளன. 5ஆம் திகதி இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. வவுனியாவில் உள்ள இந்த சந்திப்பில், இரா.சம்பந்தன் பதவியை துறக்க வேண்டுமேன எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்து தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்படும். சுமந்திரனின் கருத்து கட்சிக்குள்ளும், வெளியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மத்தியகுழு கூட்டத்திலும் இந்த விவகாரம் எதிரொலிக்கும். மத்தியகுழு கூட்டத்துக்கு முன்னதாக தன்னை நேரில் சந்திக்குமாறு இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசாவை அழைத்துள்ளார். மாவை சேனாதிராசா நேற்று மதியமே யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு புறப்பட்டு விட்டார். இன்று (2) உயர்நீதிமன்றத்தில் வலி வடக்கு காணி விடுவிப்பு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை நடக்கவுள்ளது. அதில் மாவை முன்னிலையாகிறார். சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன். அதன்பின்னர் இன்று அல்லது நாளை சம்பந்தரை சந்தித்து விட்டு திரும்புகிறார். அப்போது சுமந்திரன் விவகாரம் பற்றி ஆராயப்படும். அது மத்தியகுழுவிலும் எதிரொலிக்கும். இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமை தொடர்பில் மாவை, சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் தரப்புக்களுக்கிடையில் பனிப்போர் ஏற்பட்டு, இப்பொழுது நேரடி மோதலாக மாறியுள்ள நிலையில், தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் ரணகளத்துக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கலாம். 5ஆம் திகதி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு கூட்டம் மன்னாரில் நடைபெறவுள்ளது. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு, பெருமெடுப்பான பிரச்சாரங்களுடன் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், அந்த அணி அரசியல்ரீதியாக பெரிதாக எதனையும் செயற்படுத்த முடியவில்லை. அரசியல்ரீதியாக மட்டுமல்ல, கூட்டணியாகவும் செயற்பட முடியாமல் திணறி வருகிறது. தமிழ் அரசு கட்சியின் எம்.ஏ.சுமந்திரன் வடக்கு, கிழக்கு, கொழும்பு என பம்பரமாக சுழன்று கொண்டிருக்க, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் யாழ்ப்பாண நகரத்தை விட்டு நகர “பஞ்சிப்பட்டு“ பிடித்து வைத்த பிள்ளையார்கள் மாதிரி உட்கார்ந்திருக்கிறார்கள். கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு கூட்டத்தை கிழக்கு மாகாணத்தில் ஒருமுறையாவது நடத்தி விட வேண்டுமென, அங்குள்ளவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், ஒருமுறைகூட கிழக்குக்கு செல்ல முடியாமல்- செயற்பட முடியாமல்- இருக்கிறார்கள். இந்த பின்னணியில், கடந்த சில சந்தர்ப்பங்களில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிறைவேற்றுக்குழு கூட்டங்கள் நடந்த போதும், அவை நடந்ததே தெரியாமல் முடிந்தன. இப்பொழுது அங்கும் பல சந்தேகங்களும், நம்பிக்கையீனங்களும் ஏற்பட்டுள்ளன. இதேவிதமாக கூட்டணி செயற்பட்டால் பாராறுளுமன்ற தேர்தலை சந்திக்க முடியாது என அந்த அணியிலுள்ள சில தரப்புக்கள் கருதுவதை தமிழ்பக்கம் அறிந்தது. தமிழ்பக்கத்திடம் பேசிய ஜனநாயக போராளிகள் கட்சியின் பிரமுகர் ஒருவர்- “அனைத்து தமிழ் கட்சிகளும் ஒற்றுமையாக செயற்பட வேண்டுமென்பதே எமது நிலைப்பாடு. இலங்கை தமிழ் அரசு கட்சி உள்ளிட்ட அனைத்து தரப்புடனும் ஒன்றிணைந்து, ஓரணியாக செயற்படுவது பற்றிய யோசனையை அடுத்த நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளோம்“ என்றார். கூட்டணியிலுள்ள முக்கிய பிரமுகர் ஒருவர் தனது அடையாளத்தை வெளிப்படுத்தாமல் தமிழ் பக்கத்திடம் சில விடயங்களை பகிர்ந்தார். அவரது தகவல்களின் சுருக்கம் வருமாறு- அண்மையில் மன்னாரில் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதனும், ஜனநாயக போராளிகள் கட்சியின் துளசியும் சந்தித்து பேசியிருந்தனர். அப்போது நடந்த பேச்சுக்களில், தேர்தலை சந்திக்கும் போது, தமிழ் அரசு கட்சியுடனும் கூட்டணி வைத்திருக்க வேண்டுமென ரெலோ கருதுவதாக ஜனநாயக போராளிகள் கட்சியினர் புரிந்து கொண்டுள்ளனர். அனைத்து கட்சிகளுடனும் கூட்டணி வைக்க வேண்டுமென ஜனநாயக போராளிகள் இப்பொழுது யோசனை முன்வைப்பது, ரெலோவின் வழிநடத்தலின் பிரகாரமே. தமிழ்பக்கத்திடம் பேசிய சில ரெலோ பிரமுகர்கள், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சின்னத்தில் எந்த கட்சியும் இணைந்து தேர்தலை சந்திப்பதில் எமக்கு ஆட்சேபணையில்லை. ஆனால், அதை மீறிய எந்த முடிவையும் தலைமை எடுத்தால் கூட அதை ஏற்க மாட்டோம் என்றார்கள். ஆக மொத்தத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மத்தியகுழு கூட்டத்திலும் சில பல ரணகளமான சம்பவங்களுக்கு இடமுள்ளது என நம்பலாம்.
Leave Comments